தமிழக ஆளுநர், முதல்வர் இன்று மதுரை வருகை

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மதுரைக்கு புதன்கிழமை வருகை தருகின்றனர். ராமேசுவரம் பேய்கரும்புவில் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்து வைக்கிறார். தில்லியில் இருந்து வியாழக்கிழமை தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, மதுரை விமான நிலையத்துக்கு காலை 10 மணிக்கு வருகிறார்.   அங்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அங்கிருந்து பிரதமர், தமிழக ஆளுநர், முதல்வர் ஆகியோர் ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் செல்கின்றனர். மண்டபத்தில் இருந்து காரில் பேய்கரும்பு செல்லும் பிரதமர் அங்கு கலாம் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து கலாம் கண்காட்சி வாகனத்தைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் மீண்டும் மண்டபத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.   அங்கு அயோத்தி - ராமேசுவரம் புதிய ரயில் சேவை, மீனவர்களுக்கான நலத்திட்டம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்துப் பேசுகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையத்துக்கு பகல் 2 மணிக்கு வரும் பிரதமர், தனி விமானத்தில் தில்லி செல்கிறார். ஆளுநர், முதல்வர் வருகை...: கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரும் விமானத்தில் புதன்கிழமை இரவு மதுரை வருகின்றனர். அங்கு அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் இல்லத்தில் தங்குகின்றனர்.

Category: