நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும்: தமிழக எம்.பி.க்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தல்

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, இடதுசாரிக் கட்சிகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். மேலும், அவையின் மையப் பகுதிக்குச் சென்று அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் மூன்றாம் நாளான புதன்கிழமை மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் கூடியது. அப்போது, விவசாயிகளின் பிரச்னைகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பின. முக்கிய விவகாரங்களை அவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நேரம் தொடங்கியதும், தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து 'நீட்' தேர்வு விவகாரத்தை ஒருமித்த குரலாக எழுப்பினர். 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க வலியுறுத்தி பேசினர்.   அதிமுக உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ்: நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டு, அது தொடர்பான கோப்பு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கப் பெறவில்லை. தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் 98 சதவீதம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் அடிப்படையில் 'நீட்' தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் விருப்பமாகும். மருத்துவக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதியை மாநில அரசுதான் செய்து கொடுத்துள்ளது. மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன்: நீட் தேர்வில் தென் மாநில மாணவர்களுக்கு கடினமான கேள்விகளும், வட மாநில மாணவர்களுக்கு எளிதான கேள்விகளும் கேட்கப்பட்டன. இது பாரபட்சமான செயலாகும்.   மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன்: நீட் தேர்வில் கேட்கப்பட்ட பாதிக் கேள்விகள் தமிழகத்தில் மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட்ட பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படவில்லை. இதுதான் கூட்டுறவு கூட்டாட்சி நடைமுறையா? மாநில அரசு இது தொடர்பாக சட்டம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், மத்திய அரசு அதை ஏற்காமல் இருப்பது ஏன்?. இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் உறுப்பினர் அனந்த் சர்மா: நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசு இயற்றியுள்ள சட்டம் தொடர்பாக மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்ரமணியன், ஏ.கே. செல்வராஜ், டி.ரத்தினவேல், விஜயக்குமார், கே.ஆர். அர்ஜுனன், விஜிலா சத்யானந்த் உள்ளிட்டோரும், திமுக தரப்பில் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோரும் அவையின் மையப் பகுதிக்குச் சென்று நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி கோஷமிட்டனர்.

Category: